அனுபவங்கள் பேசுகின்றன.....
இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு தனியார் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான
விவாத நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதல் கட்டமாக என் கல்லூரிக்கு வந்து
மாணவர்களைத் தேர்வு செய்துகொண்டு போனார்கள். என்னையும் தேர்வு செய்ததில்
நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த நாள் வரை கால் தரையில் நிற்கவில்லை. றெக்கை இல்லாமல்
பறந்துக்கொண்டிருந்தேன். எனக்குக் கிடைத்த தலைப்பு கொஞ்சம் அரசியல் கலந்த
சர்சைக்குள்ளானதுதான் என்றாலும் என் அறிவுக்கு எட்டிய வரை என்னால் இயன்ற
குறிப்புகளைத் தயாரித்து கொண்டு சென்றேன். 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்படும்
என்று அறிவித்திருந்தார்கள். கல்லூரியிலிருந்து 12.3௦க்கே கிளம்பி வடபழனி ஏ.வி.எம்.
ஸ்டுடியோவிற்கு செல்ல மணி 2 ஆகிவிட்டது. அங்கு சென்றால் யாரையும் காணோம்!! “சரி
எப்படியும் நாலு மணி ஆகிடும்!! சொன்ன நேரத்திற்கு எப்போ ஆரமிசிருகாங்க நம்ம
ஊருலன்னு” நானும் என் தோழியும் ஸ்டுடியோவை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டோம். மூணும்
இல்ல நாலும் இல்ல. நிகழ்ச்சி துவங்கினது ஆறு மணிக்கு! நான் பேச இருந்த பக்கத்தில்
ஒரே பெண் என்பதால் இரண்டாவது வரிசையில் அமர வைத்தார்கள்.. எதிர்ப்பார்ப்புகள் எகிறின..!!
பல பிரபலமான பதிப்பகங்களில் ஆசிரியர்கள்,
எழுத்தாளர்கள் மத்தியில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் அந்த வாய்ப்பு
மட்டும்தான் கிடைத்தது. கொண்டு சென்ற குறிப்புகள் எதுவும் அங்கு பயன்படவில்லை!!
உனக்கு மஞ்ச கலரு பிடிக்குமா இல்ல ஊதா கலரு பிடிக்குமா என்ற ரீதியில் ஏதோவொரு
கேள்வியைக் கேட்டார்கள். 6 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இடையில்
கொடுத்த சூடான டீ மட்டுமே!
எல்லாம் முடிய 11.3௦ ஆகிவிட்டது. மதியம்
சாப்பிட்டவர்களுக்குப் பசிக்குமே என்று அக்கறை இல்லை!! பெண்கள் நம் கண்கள் என்று
கேமரா முன்னாடி வாய் கிழிய பேசுவோருக்கு இரவு 12 மணி வரை பொம்மைபோல் உட்கார
வைத்தோமே..அந்தப் பெண் எவ்வாறு நடுசாமத்தில் வீடு போய் சேர்வாள் என்ற கவலை இல்லை!!
எப்படியோ முன்பின் பார்த்திராத என் கல்லூரி MCA சீனியர் அண்ணாவின் உதவியில்,
வந்திருந்த சிறப்பு விருந்தினரின் காரில் வீடு வந்து சேர்ந்தேன். இந்த லட்சணத்தில்
உடல் சோர்வு என்று மறுநாள் கல்லூரிக்கு வேறு செல்லவில்லை! அன்று நான் மனதார
வேண்டிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான்.. “நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் எனக்கு
மறந்துவிட வேண்டும்”.
அன்று எடுத்த சபதம்... “போவ?? டிவியில வரணுனு
ஆசப்பட்டு இனிமே இந்த மாதிரி எங்கயாவது போவ?? உனக்கு இதுவும் வேணும்... இதுக்கு
மேலயும் வேணும்..!!!”
