எது பெண்ணுரிமை...??
கொஞ்சம் சமுதாயத்தின் பக்கம் பார்வையைத்
திருப்பலாம் என்று எண்ணியபோது மனதில் முதலில் உதித்தது பெண்ணுரிமை! “அடுப்பூதும்
பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று ஆணாதிக்கம் கை ஓங்கி இருந்த காலம் நம்
நாட்டில் உண்டு. பெண் என்றால் சமைக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்
என்ற எண்ணமே பரவலாக இருந்தது. மாலை ஆறு மணிக்குமேல் பெண்கள் வீட்டை விட்டு செல்ல
கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அவர்களின் பாதுகாப்பிற்காகத்தான் என்றாலும் அதனைக்
காரணம் காட்டிப் பெண்களை அடிமைப்படுத்திய ஆண் சமூகமும் இங்கு இருந்திருக்கிறது.
ஜான்சிராணி, மதுரை சின்னப்பிள்ளை, வேலுநாச்சியார் போன்று அத்திப் பூத்தாற் போல ஓரிருவர்
இருந்தாலும் பெண்களைப் பிள்ளை பெரும் இயந்திரமாகவே பார்த்து வந்தனர் சென்ற
நூற்றாண்டு வரை. பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் தாக்கம் கொஞ்சம் தாமதமாகவே வெளியில்
வந்தது.
இப்போது நிலாவைக்காட்டி சோறூட்டத்தான் பெண்கள்
என்ற நிலை மாறி நிலவிலேயே கால் பதிக்கும் காலம் வந்துவிட்டது. எவ்வளவோ சமுதாயப்
பிரச்சனைகளை முட்டி மோதி முறியடித்து ஆண்களுக்கு நிகராகத் தன்னை
நிலைநிறுத்திக்கொள்ள ஒரு பெண் சந்திக்கும் இன்னல்கள், குடும்பத்தையும்
விட்டுக்கொடுக்காமல் தன் இலட்சியத்தையும் துறக்காமல்,இரண்டையும் சமர் செய்ய
சிரித்த முகத்தோடும் தான் மட்டுமே அனுபவிக்கும் வெளிகாட்டா வலிகளோடும் அவள் படும்
வேதனைகள்..இவற்றை எந்த மொழியாலும் எந்த வார்த்தையாலும் வெளிப்படுத்த முடியாது.
பல்வேறு அரசியல் காரணங்களால் இன்னும் 33
சதவிகிதம் கூட ஊர்ஜிதம் இல்லை என்றாலும்
நாளுக்கு நாள் ஆணுடன் தன்னை சமன் படுத்திக்கொள்ள முன்னேறி வருகிறாள்
அவள்-பெண்ணுரிமை என்ற போராட்ட ஆடை தரித்து!
ஆனால் அதன் நோக்கத்தை அனைத்துப் பெண்களும்
சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்கிறார்களா என்றால் அதன் பதில் நிச்சயம் இல்லை
என்பதே. எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகர் என்றால் அழிவின் பாதையிலும்
அப்படிதான் என்று பெண்ணுரிமையை முழுதாகப் புரிந்துகொள்ளாமல் தன் வாழ்வையும்
கலாசாரத்தையும் பெண்கள் மது, புகை, போதை போன்றவற்றிற்கு அடிமையாகி
சீரழிதுக்கொள்வது மிகுந்த வேதனையைத் தருகிறது. அது அவரவர் விருப்பம். நமக்குத்
தலையிட உரிமை இல்லை என்று விலகிவிட முடியாது. இது நம் பாரதத்தின் கலாசாரம்
என்பதையும் மாதர் குலத்திற்கு ஒரு இழுக்கு என்பதையும் தாண்டி இது ஒரு பெண்ணின்
வாழ்க்கை! சரியான பக்குவமும் புரிதலும் இல்லாததால் ‘பெண் சுதந்திரம்’ என்ற பெயரில்
அவளது எதிர்காலம் சீரழிகிறது என்றால் பாடுபட்டு அவளுக்கு, இந்தப் பெண்சமூகத்திற்கு
அடிமை விலங்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தோருக்கும் அவர்களது தூய
நோக்கத்திற்கும் ஏற்படும் பெரும் அவமானம் அல்லவா! மேற்க்கத்திய கலாச்சாரத்தில்
முழுவதுமாகப் பற்று கொள்ளாமல் அவள் தன் குடும்பத்தையும், எதிர்காலத்தையும் இந்த
சமூகத்தையும் மனதில் கொண்டு நம் பாரதக்கலாச்சாரத்தை எண்ணிப்பார்த்து சரியான
பாதையினை வகுத்துப் பயணிப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமை ஆகும்!
எனது கருத்துகள் தவறானதாகவும் இருக்கலாம். எண்ணினேன்..எழுதினேன்..தங்களது
அபிப்ராயங்களையும் பின்னூட்டத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி..!!!
No comments:
Post a Comment