தேடுக

Saturday, 5 April 2014

பாட்டி கதைகள்’ நம் மரபின் அடையாளம். பல்வேறு காரணிகளால் அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அதனைக் காக்க, அதே சமயம் அதனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்ல, சாரல் தமிழ் மன்றம் யூ-டியூபில் காலடி எடுத்து வைக்கிறது. முதல் முயற்சி, ’கதை சொல்லி’. வாரா வாரம் ஒரு கதை பதிவேற்றம் செய்யப்படும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதைப் போட்டுக் காண்பியுங்கள். இதனால் உங்கள் வீட்டுக் குழந்தையின் கற்பனைத் திறன் வளர்வதோடு மட்டுமில்லாமல், பல நல்ல சிந்தனைகளை அந்தப் பிஞ்சு மனது உள்வாங்கிக் கொள்வதால் வருங்காலத்தில் ஒரு நல்ல மனிதனாக உருவாவதற்கான ஆரம்ப விதையும் விதைக்கப்படும்.

உங்கள் மேலான கருத்துகளைப் பின்னூட்டத்தில் அளிக்கவும். எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள அது உதவிகரமாக இருக்கும் அதே நேரத்தில் பல புதிய நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நாங்கள் வழங்கவும் ஒரு ஊக்கமாக அது அமையும்.

நன்றி..


கதை சொல்லி # 1...   https://www.youtube.com/watch?v=uiXDviVsgdM&feature=youtu.be

Wednesday, 2 April 2014

நீண்ட நாள் கழித்து என் பள்ளி ஆசிரியையைப் பார்த்தேன்.
அவர் கேட்ட முதல் கேள்வி ," இன்னும் நீதானே காலேஜ் டாப்பர்?"

மைண்ட் வாய்ஸ் : " இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு? "

Saturday, 29 March 2014

அனுபவங்கள் பேசுகின்றன.....

     இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு தனியார் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான விவாத நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதல் கட்டமாக என் கல்லூரிக்கு வந்து மாணவர்களைத் தேர்வு செய்துகொண்டு போனார்கள். என்னையும் தேர்வு செய்ததில் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த நாள் வரை கால் தரையில் நிற்கவில்லை. றெக்கை இல்லாமல் பறந்துக்கொண்டிருந்தேன். எனக்குக் கிடைத்த தலைப்பு கொஞ்சம் அரசியல் கலந்த சர்சைக்குள்ளானதுதான் என்றாலும் என் அறிவுக்கு எட்டிய வரை என்னால் இயன்ற குறிப்புகளைத் தயாரித்து கொண்டு சென்றேன். 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். கல்லூரியிலிருந்து 12.3௦க்கே கிளம்பி வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவிற்கு செல்ல மணி 2 ஆகிவிட்டது. அங்கு சென்றால் யாரையும் காணோம்!! “சரி எப்படியும் நாலு மணி ஆகிடும்!! சொன்ன நேரத்திற்கு எப்போ ஆரமிசிருகாங்க நம்ம ஊருலன்னு” நானும் என் தோழியும் ஸ்டுடியோவை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டோம். மூணும் இல்ல நாலும் இல்ல. நிகழ்ச்சி துவங்கினது ஆறு மணிக்கு! நான் பேச இருந்த பக்கத்தில் ஒரே பெண் என்பதால் இரண்டாவது வரிசையில் அமர வைத்தார்கள்.. எதிர்ப்பார்ப்புகள் எகிறின..!!
பல பிரபலமான பதிப்பகங்களில் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் அந்த வாய்ப்பு மட்டும்தான் கிடைத்தது. கொண்டு சென்ற குறிப்புகள் எதுவும் அங்கு பயன்படவில்லை!! உனக்கு மஞ்ச கலரு பிடிக்குமா இல்ல ஊதா கலரு பிடிக்குமா என்ற ரீதியில் ஏதோவொரு கேள்வியைக் கேட்டார்கள். 6 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இடையில் கொடுத்த சூடான டீ மட்டுமே!
எல்லாம் முடிய 11.3௦ ஆகிவிட்டது. மதியம் சாப்பிட்டவர்களுக்குப் பசிக்குமே என்று அக்கறை இல்லை!! பெண்கள் நம் கண்கள் என்று கேமரா முன்னாடி வாய் கிழிய பேசுவோருக்கு இரவு 12 மணி வரை பொம்மைபோல் உட்கார வைத்தோமே..அந்தப் பெண் எவ்வாறு நடுசாமத்தில் வீடு போய் சேர்வாள் என்ற கவலை இல்லை!! எப்படியோ முன்பின் பார்த்திராத என் கல்லூரி MCA சீனியர் அண்ணாவின் உதவியில், வந்திருந்த சிறப்பு விருந்தினரின் காரில் வீடு வந்து சேர்ந்தேன். இந்த லட்சணத்தில் உடல் சோர்வு என்று மறுநாள் கல்லூரிக்கு வேறு செல்லவில்லை! அன்று நான் மனதார வேண்டிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான்.. “நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் எனக்கு மறந்துவிட வேண்டும்”.

அன்று எடுத்த சபதம்... “போவ?? டிவியில வரணுனு ஆசப்பட்டு இனிமே இந்த மாதிரி எங்கயாவது போவ?? உனக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்..!!!”

Friday, 28 March 2014

பிடிவாதங்களைப் பார்க்கும் கண்களுக்குப் போராட்டங்கள் தெரிவதில்லை..
போராட்டங்களை உணரும்போது மனம் பிடிவாதங்களை மதிப்பதில்லை!!

Wednesday, 26 March 2014

கல்லூரியில் கிடைத்த முதல் அங்கீகாரம்...


முடிந்துவிட்டது...அது முடிந்து 20 நாட்கள் ஆகின்றன.இன்னும் அந்த பிரம்மிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை!!கல்லூரியில் எங்கள் சாரல் தமிழ் மன்றம் சார்பாக நாங்கள் அரங்கேற்றிய முதல் நாடகம்!! வெறித்தனமான முயற்சிகளுடன் வெற்றிகரமாக முடிந்தது! என் பெயர் என்னவென்று எனக்கு மறந்தேவிட்டது. நந்திதா என்று ஏதோ வரும். பார்ப்பவர் எல்லாம் பாரூ மாமி என்றே அழைத்தால் என் பெயர் எப்படி எனக்கு நினைவிருக்கும்?? ஆனால் இதுதானே எனக்குப் பெருமை!! நான் ஒரு டே ஸ்காலர். தினமும் ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் நான் இரவு எட்டு மணிக்குதான் திரும்புவேன் என்று கூறினேன் ஒரு நாள்.. அன்று எனக்கு அடி விழாமல் தப்பித்தது நான் செய்த பெரும் பாக்கியம்!!
நாடகத்தில் நடித்தே தீரவேண்டும் என்ற வெறி.அனைவரின் எதிர்ப்பையும் மீற வைத்தது. காவிரியைக் கல்லணை தடுப்பது நன்மைக்குத்தான் என்றாலும் காவிரியால் கல்லணையைத் தாண்டி ஓட முடியாது. என் கல்லணை பெல்ஜியம் சென்றிருக்கிறது என்ற திமிரில் அவளது போன் காலையும் மதிக்காமல் நாடகப் பயிற்சியைத் துவங்கினேன். வீட்டார் தடுத்து ஓய்ந்துவிட்டார்கள். வீசும் காற்றுக்கு யார்தான் விலங்கிட முடியும்?சரியாக ஒரு மாத உழைப்பு. இறுதியாக மார்ச் 10 அன்று அரங்கேறியது எங்கள் நாடகம். ஏகத்துக்கும் ஆரவாரம்! எனக்கும் எங்கள் சாரல் கூத்துப் பட்டறைக்கும் கிடைத்த முதல் மற்றும் மிகப்பெரிய அங்கீகாரம் இது.
பெருமையாகவும் கொஞ்சம் பயமாகவும் உள்ளது. இனி வரும் நாடகங்களில் எகிறும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியுமா?? தெரியவில்லை. ஆனால் முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது!! இந்த நாடகத்திற்கு என் சார்பில் பெரிதாக எதுவும் கிழிக்கவில்லை என்றாலும் இனி வரும் நாட்களில் சாரல் கூத்துப் பட்டறைக்கு என் பங்களிப்பைப் பெரிதளவில் தர முயற்சிகிறேன்!!
எங்கள் நாடகத்திற்கு வந்து எங்களை ஊக்குவித்துப் பெருமை படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்! இதைத் தவிர வேறு வார்த்தை எழவில்லை!!

விரைவில் சந்திப்போம்!
என்னுடைய கருத்துகளுக்கும் பிரபஞ்சத்தின் ஓரத்தில் ஒரு இடம்!!
தொடர்ந்து சந்திப்போம்!!
நிறைய சிந்திப்போம்!!