தேடுக

Wednesday, 16 September 2015

                 எது பெண்ணுரிமை...??

கொஞ்சம் சமுதாயத்தின் பக்கம் பார்வையைத் திருப்பலாம் என்று எண்ணியபோது மனதில் முதலில் உதித்தது பெண்ணுரிமை! “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று ஆணாதிக்கம் கை ஓங்கி இருந்த காலம் நம் நாட்டில் உண்டு. பெண் என்றால் சமைக்க வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணமே பரவலாக இருந்தது. மாலை ஆறு மணிக்குமேல் பெண்கள் வீட்டை விட்டு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் அவர்களின் பாதுகாப்பிற்காகத்தான் என்றாலும் அதனைக் காரணம் காட்டிப் பெண்களை அடிமைப்படுத்திய ஆண் சமூகமும் இங்கு இருந்திருக்கிறது. ஜான்சிராணி, மதுரை சின்னப்பிள்ளை, வேலுநாச்சியார் போன்று அத்திப் பூத்தாற் போல ஓரிருவர் இருந்தாலும் பெண்களைப் பிள்ளை பெரும் இயந்திரமாகவே பார்த்து வந்தனர் சென்ற நூற்றாண்டு வரை. பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் தாக்கம் கொஞ்சம் தாமதமாகவே வெளியில் வந்தது.
இப்போது நிலாவைக்காட்டி சோறூட்டத்தான் பெண்கள் என்ற நிலை மாறி நிலவிலேயே கால் பதிக்கும் காலம் வந்துவிட்டது. எவ்வளவோ சமுதாயப் பிரச்சனைகளை முட்டி மோதி முறியடித்து ஆண்களுக்கு நிகராகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு பெண் சந்திக்கும் இன்னல்கள், குடும்பத்தையும் விட்டுக்கொடுக்காமல் தன் இலட்சியத்தையும் துறக்காமல்,இரண்டையும் சமர் செய்ய சிரித்த முகத்தோடும் தான் மட்டுமே அனுபவிக்கும் வெளிகாட்டா வலிகளோடும் அவள் படும் வேதனைகள்..இவற்றை எந்த மொழியாலும் எந்த வார்த்தையாலும் வெளிப்படுத்த முடியாது. பல்வேறு அரசியல் காரணங்களால் இன்னும் 33 சதவிகிதம் கூட ஊர்ஜிதம் இல்லை என்றாலும் நாளுக்கு நாள் ஆணுடன் தன்னை சமன் படுத்திக்கொள்ள முன்னேறி வருகிறாள் அவள்-பெண்ணுரிமை என்ற போராட்ட ஆடை தரித்து!
ஆனால் அதன் நோக்கத்தை அனைத்துப் பெண்களும் சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்கிறார்களா என்றால் அதன் பதில் நிச்சயம் இல்லை என்பதே. எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகர் என்றால் அழிவின் பாதையிலும் அப்படிதான் என்று பெண்ணுரிமையை முழுதாகப் புரிந்துகொள்ளாமல் தன் வாழ்வையும் கலாசாரத்தையும் பெண்கள் மது, புகை, போதை போன்றவற்றிற்கு அடிமையாகி சீரழிதுக்கொள்வது மிகுந்த வேதனையைத் தருகிறது. அது அவரவர் விருப்பம். நமக்குத் தலையிட உரிமை இல்லை என்று விலகிவிட முடியாது. இது நம் பாரதத்தின் கலாசாரம் என்பதையும் மாதர் குலத்திற்கு ஒரு இழுக்கு என்பதையும் தாண்டி இது ஒரு பெண்ணின் வாழ்க்கை! சரியான பக்குவமும் புரிதலும் இல்லாததால் ‘பெண் சுதந்திரம்’ என்ற பெயரில் அவளது எதிர்காலம் சீரழிகிறது என்றால் பாடுபட்டு அவளுக்கு, இந்தப் பெண்சமூகத்திற்கு அடிமை விலங்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தோருக்கும் அவர்களது தூய நோக்கத்திற்கும் ஏற்படும் பெரும் அவமானம் அல்லவா! மேற்க்கத்திய கலாச்சாரத்தில் முழுவதுமாகப் பற்று கொள்ளாமல் அவள் தன் குடும்பத்தையும், எதிர்காலத்தையும் இந்த சமூகத்தையும் மனதில் கொண்டு நம் பாரதக்கலாச்சாரத்தை எண்ணிப்பார்த்து சரியான பாதையினை வகுத்துப் பயணிப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமை ஆகும்!     
        எனது கருத்துகள் தவறானதாகவும் இருக்கலாம். எண்ணினேன்..எழுதினேன்..தங்களது அபிப்ராயங்களையும் பின்னூட்டத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி..!!!
              எனக்கு இது முதல் பிரசவம்

சின்ன வயசுல இருந்தே ரொம்ப துரு துரு. ஏதாவது போட்டின்னு அறிவிப்பு பாத்துட்டா போதும். என்ன எதுன்னு விசாரிக்காம பேர் குடுத்துட வேண்டியது. அப்புறமா அம்மாவ நச்சரிச்சு உண்ணாவிரதம் இருந்து தாத்தா பாட்டிகிட்ட அப்பாவி புள்ள மாதிரி முகத்த வெச்சு அவங்க அனுதாபத்த சம்பாதிச்சு அம்மா அப்பாவ சம்மதிக்க வெச்சு ராத்திரி பகலா ப்ராக்டிஸ் பண்ணி அதுக்குன்னு ஸ்பெஷல் கிளாஸ் வேற போய் காலைல நாலு மணிக்கெல்லாம் அப்பாவ பஸ் ஸ்டாப்ல விட சொல்லி அம்மாக்கு தெரியாம அப்போவே அம்பது நூறுன்னு அப்பாகிட்ட பாக்கெட் மணி வாங்கிட்டு ஊர் விட்டு ஊர் போய் ஜெயிக்கறேனோ பல்ப் வாங்கறேனோ....நான் நெனச்சத கச்சிதமா ஸ்கெட்ச் போட்டு நடத்தி காட்டிடுவேன்! இப்படி நெறைய விஷயத்துல நடந்துருக்கு. சுனாமி வந்தபோது நாகபட்டினம் வேளாங்கண்ணி எல்லாம் செமயா பாதிக்கபட்டுது. அப்போ எங்க ஏரியா கலக்டர் ராதாகிருஷ்ணன் அதிர டி ஆக்ஷன் எல்லாம் எடுத்து தமிழ்நாட்டையே நாகப்பட்டினம் பக்கம் திரும்பி பாக்க வெச்சார். அவர பாக்கனும்னு ஒரே ஆசை எனக்கு. அஞ்சாவது படிக்கற பொண்ணு கலக்டர எப்படி பாக்க முடியும்? குடியரசு தினம் அன்னிக்கு கலக்டர் ஆபிஸ்ல டான்ஸ் காம்படிஷன்ன்னு நியூஸ் வந்துது. இதாண்டா சான்ஸ்ன்னு வராத டான்ஸ வா வான்னு வர வெச்சு டீம்ல செலக்ட் ஆகி அவர் முன்னாடி போய் ஆடி ஆடோக்ராபும் வாங்கிட்டேன்.
இவ்வளவு பிளானிங் ஒவ்வொரு விஷயத்துலயும். நான் நெனச்சது நடக்கணும்ன்னு. அது பின்னாடி எனக்கு பெரிய விஷயங்கள்ல கை குடுக்கும்ன்னு நெனச்சு கூட பாத்ததில்ல. இப்படியே போய்க்கிட்டு இருக்க, காலேஜ் பைனல் இயர் வந்தாச்சு. நடுவுலயும் நெறைய அக்கபோரு நடந்துருக்கு. வேற ஒரு சந்தர்பத்துல கட்டாயம் பகிர்ந்துக்கறேன். இப்போ மறுபடியும் விட்ட எடத்துக்கு வருவோம். பொதுவாவே ஊர் சுத்த பிடிக்கும். ரிபோர்டேர்ன்னா ஊர் சுத்த சாக்கு கெடக்குமே விகடன் மாணவப்பத்திரிக்கையாளர் திட்டத்துக்கு மூணு வருஷமா அப்ளை பண்ணி இந்த வருஷம்தான் கெடச்சுது. எல்லாம் நல்லாதான் போச்சு. ஆகஸ்ட் 19 வரைக்கும்.
அவள் விகடன்ல ஒரு மீட்டிங் போட்டாங்க. அவள் 16ன்னு ஒரு புது புத்தகம் ரிலீஸ் பண்ண போறதாகவும் அதுக்கு மாணவப்பத்திரிக்கையாளர்களே முழு பங்களிப்பும் குடுத்தா நல்ல இருக்குமேன்னு கோ ஆர்டினேடர் ஐடியா குடுத்தாங்க.
சரி. இதுல என்ன இருக்கு?
அந்த புக்கோட முதல் இஷ்யுக்கு நானும் நரேஷ்ன்னு இன்னொரு ஸ்டுடண்டும்தான் டீம் லீடர்ஸ். நாங்கதான் பொறுப்பா வேலை செய்யணும்ன்னு எடுக்கப்பட்ட முடிவு. ஒரு புக். அதுக்கு ஆர்டிக்கிள் வேணும். அத டீம்ல எல்லாரும் செய்ய போறாங்க. நாம கலக்ட் பண்ணி குடுத்துட்டு கடைய சாத்திடலாம். இதான் என் எண்ணம். பிளானிங் பிடிக்கும். சரி பண்ணற காரியத்த உருப்பிடியா பண்ணலாமேன்னு செக் லிஸ்ட் எல்லாம் போட்டு வாட்சாப்ல எல்லாரையும் இம்சை பண்ணி க்ரூப்பை விட்டு ஓடற அளவுக்கு பிளானிங் மெசெஜெஸ் அனுப்பி டார்ச்சர் குடுத்து அப்போ அப்போ டீம் மெம்பர்ஸ அலர்ட் பண்ணி மூணு நாள்ல முப்பது ஆர்டிக்கிள் முடிச்சு குடுத்தாச்சு. அப்போ கூட பெருசா பீல் இல்ல. அதுக்கு அப்பறம் ஆபிஸ்ல கோ ஆர்டினேடர், எடிடர்ந்னு எல்லாரும் பாராட்டினதும்....எம்.டி.க்கு நானே ஒரு ப்ரேசெண்டஷன் தயாரிச்சு அதுக்கு நானும் நரேஷும் வாய்ஸ் குடுத்ததும்....பார்ம் லிஸ்ட் போட்டு எது வரணும் எது வரக்கூடாது அந்த புக்ல ன்னு எங்ககிட்ட யோசனை கேட்டதும்...ஆர்டிக்கிள் எந்த மாதிரி வந்தா நீங்க படிப்பீங்களோ அந்த மாதிரி டிசைன் பண்ணுங்கன்னு எங்க கைல எடிட்டிங் அண்ட் டிசைனிங் ஒப்படைச்சதும்....எல்லாதுக்கும் மேல இந்த பசங்ககிட்ட வேலைய குடுத்தா உருப்பிடியா செய்வாங்கன்னும் நந்திதாகிட்ட பொறுப்ப ஒப்படைச்சா கரக்டா முடிப்பானும் சீனியர்ஸ் எங்க மேல வெச்ச நம்பிக்கைய உணர்ந்தபோது....அவள் 16 ன்னு ஒரு கருவை நான் சுமக்கறத உணர்ந்தேன். மெல்ல மெல்ல அந்த கரு வளர்றத என்ஜாய் பண்ணி....அந்த பீலே வேற லெவல்.
புக்கோட முதல் டம்மி காப்பியை பார்க்கும்போது நான் எப்படி இருந்தேன்னு எனக்கே தெரியல. விமலா மேம்கிட்ட கேட்டா சிரிச்சுக்கிட்டே சொல்லுவாங்களா இருக்கும். இது சரி இல்ல அது சரி இல்லன்னு எல்லாரையும் நச்சு பண்ணி புதுசு புதுசா லேஅவுட் கொண்டு வந்து டீம்ல எல்லாரையும் நானும் கிருமியும் (கிரண் குமார் :p) படுத்தி எடுத்து ஒரு பார்முக்கு கொண்டு வந்துருக்கோம். இது நிச்சயமா என்னால மட்டும் முடிஞ்சு இருக்காது. எல்லாரும் ஈக்வலா வேலை செஞ்சாலும் அத்தனைபேரும் இழுத்த இழுப்புகெல்லாம் முகம் சுளிக்காம ஒத்துழைச்சாங்க. கடைசி நிமிஷம் வரைக்கும் எல்லாரும் நேரம் பாக்காம வேலை செய்யறாங்க. ஒரு நல்ல டீம் லீடரா இவங்கள வழி நடத்தறேன்னு நினைக்கறேன். எவ்வளவு பேர் இதுக்காக பாடுபட்டாலும் யாருக்கும் அவளை விட்டு குடுக்க மனசு வரல. என் மனசுல வளர்த்துக்கிட்டு இருக்கற கரு...ஒவ்வொரு பக்கத்தையும் பாக்கும்போது ஒரு குழந்தையோட பிஞ்சு கை கால் முகம்ன்னுதான் தோணுது. இப்படி ஒரு பிணைப்பு ஒரு மனிதனுக்கும் முப்பத்திரண்டு பக்க புத்தகத்துக்கும் வருமான்னு தெரியல. இன்பாக்ட் நான் பெருசா நாவல் எல்லாம் கூட எழுதல இவ்ளோ பில்ட் அப்க்கு. ஆனா எனக்கு இது நூறு சாகித்ய அகடமி நாவல்க்கு சமம். அப்படி ஒரு உறவு எங்களுக்குள்!
முதல் முதலாய்.... அவள் பிரசவிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்!
தட் மதர்லி பீல் பார் தி முதல் தடவை!

சீக்கிரம் வெளியே வா என் கண்மணியே! 

Monday, 1 December 2014

               பிரேக்குகளும் சில பயணங்களும்...
எதுவுமே இல்லாதபோதுதான் அருமை தெரியுங்கறது சரியாத்தான் இருக்கு. தினம் தினம் காலைலேயே எழுந்து அரை தூக்கத்தோட (சில பல சமயம் அரை மனசோட) கல்லூரிபேருந்துல ஏறினா புழுதிலேந்து காப்பாத்திக்க முகத்துல துப்பட்டாவைக் கட்டிக்க அலுப்பா இருக்கும்தான். ஆனா விடுமுறைல இருக்கும்போதுதான் தெரியுது பேருந்து பயணங்கள் எவ்வளவு சுகமானதுன்னு.
கல்லூரி விடுதியில தாங்காம வீட்டிலேர்ந்து போறதால நான் நிறைய அனுபவங்களை மிஸ் பண்ணி இருக்கேன்.நண்பர்களோட நாடு ராத்திரி வரைக்கும் ஆட்டம் பாட்டம்னு கொட்டம் அடிக்கறது...நல்ல இல்லன்னு திட்டிகிட்டே மெஸ் சாப்பாட ஒரு கை பாக்கறது...சாயந்தரம் அப்படியே ஒரு வாக் போறது...இப்படின்னு எவ்வளவோ என் ஆசைகள் நிறைவேறாம போயிருக்கு. ஆனா எனக்கு கெடச்ச பேருந்து அனுபவங்கள்...எந்த ஒரு மாணவர்க்கும் கெடச்சு இருக்காது! பேருந்து பயணம்..அது ஒரு தனி சுகம்! திங்களும் வெள்ளியும் எல்லார் கைலயும் புக்ஸ், ஜெராக்ஸ் காபிகள் இல்லேன்னா ஸ்மார்ட் போன்ல பி.டி.எப். கண்டிப்பா இருக்கும். மத்த நாள் எல்லாம் கதையே வேற! சிலர் கையில reader’s digest..சிலர் கையில chetan bhagat, ravinder singh  மாதிரி மசாலா லவ் ஸ்டோரீஸ்..(டீன் ஏஜெர்ஸ் ஆச்சே).. காதுல இயர் போன். சுங்கச்சாவடில வேற காலேஜ் மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியா பாக்கறாங்கன்னு தெரிஞ்சே வெட்டி சீனுக்காக காதுல இயர் போனை மாட்டிக்கிட்டு, டச் போனை கொஞ்சம் ஜன்னலுக்கு மேல துக்கி வச்சுக்கிட்டு, அப்டியே தலைல போட்டு இருக்கற கிளிப்பை எடுத்து விட்டு ப்ரீ ஹேரை காத்துல பறக்க விட்டு...நல்லா சாஞ்சு உட்கார்ந்து கால் மேல கால் போடறது. (எங்க காலேஜ்ல ஜீன்ஸ் போட்டுக்கலாமே.....உங்களுக்கு எல்லாம் கெடயாதே....அப்டீன்னு வெறுப்பேத்ததான் ;P ). இதுல பசங்க யோ யோ லுக் கொடுக்க கொஞ்சம் ரொம்பவே மெனக்கெடுவாங்க. சாயந்தரம் அலப்பறை கேக்கவே வேண்டாம். ரோட்ல நிக்கற traffic police எட்டிப் பாக்கற அளவுக்கு கத்திக் கத்தி மாபியா, டம் ஸீ, லிட் எல்லாம் விளையாட வேண்டியது! இந்த மாதிரி சின்ன சின்ன அனுபவங்கள் இருந்தாலும் நான் ரொம்ப ரசிச்சது டிரைவர் போடற பிரேக்குகள்தான். எங்க பஸ்ஸை கரகாட்டக்காரன் காரை வெச்சிருந்த சொப்பனசுந்தரியோட ஒன்னு விட்ட அக்கா வெச்சிருந்தாங்க. அதை அப்படியே அதே கண்டிஷன்ல என் காலேஜ் வாங்கி என் ரூட்ல விட்டுட்டாங்க. ஸ்டாப்புக்குப் பதிமூணு அடி முன்னாடி பிரேக் போடா ஆரமிச்சாதான் ஸ்டாப்க்கு அஞ்சரை அடி தள்ளி நிக்கும். இதுலயும் எங்க டிரைவர்க்குப் பேராசை. அடிக்கடி சடன் பிரேக் போட்டு ஹீரோயிசம் காட்டணும்னு. நல்லா காலையில அடிக்கற காத்துல தூக்கம் சொக்கும். அப்படியே காதுல கேக்கற பாட்டு கூட உறைக்காத அளவுக்கு தூங்கின அன்னிக்கு லேப் எதாவது கான்செல் ஆனா மாதிரி ஒரு கனவு வரும். அது பொறுக்காது அந்த டிரைவர்க்கு. படக்குன்னு ஒரு சடன் பிரேக் போடுவார். முன்னாடி செஅட் கம்பியில போய் தலை முட்டிக்கும். தூக்கமும் போச்சு.....கனவும் போச்சு..முதல் சீட்ல கதவுக்கு நேரா உட்கார்ந்து இருந்தா மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் கதைதான். விக்கெட்டை காப்பாத்திக்கவே சரியாப் போய்டும்..! சாயந்தரம் அதுக்கு மேல! விளையாடிட்டு இருக்கும்போது சடன் பிரேக் போட்டு....ஒருத்தர் மேல இன்னொருத்தர் விழுந்து...நடுவுல இருக்கற கம்பியில போயி முட்டிகிட்டு...சீட்ல இருக்கற பேக் எல்லாம் உருண்டு கீழ விழுந்து..அஞ்சு நொடில அலங்கோலம் ஆகிடும். இதுல ஒரு நாள் ஒரு பொண்ணு கீழ விழப் போக, வளையோச பாட்டுல வர்ற கமல் மாதிரி (அப்படீன்னு அவனுக்கே நெனப்பு) ஒரு பையன் அவள தாங்கிப் பிடிக்க...அடுத்த ரெண்டு நாள்ல புதுசா ஒரு ஜோடிய உருவாக்கி காபி ஷாப்கும் பீச் கடலை விக்கறவனுக்கும் பிசினஸ் ஏத்தி விட்டு சமூக சேவை செஞ்ச புண்ணியம் அந்த பிரேக்குக்கு.

அப்பப்போ தன்னோட இருப்பை காட்டிக்க தண்டவாளத்துல அடிப்பட்ட நாய்க்குட்டி மாதிரி ஒரு சத்தம் போடும். ஆனா அந்த சதம் இல்லாம இப்போ எல்லாம் பேருந்து பயணம் உற்சாகமாவே இருக்கறதில்ல. இன்னும் ஒரு வருஷத்துல என்னோட இந்த பேருந்தையும் பிரேக்கையும் விட்டுப் பிரிஞ்சாலும் என்னிக்கும் என் மனசுல சத்தம் போட்டுகிட்டே இருக்கும்....நாய்க்குட்டி பிரேக்!!

Saturday, 5 April 2014

பாட்டி கதைகள்’ நம் மரபின் அடையாளம். பல்வேறு காரணிகளால் அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அதனைக் காக்க, அதே சமயம் அதனை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்ல, சாரல் தமிழ் மன்றம் யூ-டியூபில் காலடி எடுத்து வைக்கிறது. முதல் முயற்சி, ’கதை சொல்லி’. வாரா வாரம் ஒரு கதை பதிவேற்றம் செய்யப்படும். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இதைப் போட்டுக் காண்பியுங்கள். இதனால் உங்கள் வீட்டுக் குழந்தையின் கற்பனைத் திறன் வளர்வதோடு மட்டுமில்லாமல், பல நல்ல சிந்தனைகளை அந்தப் பிஞ்சு மனது உள்வாங்கிக் கொள்வதால் வருங்காலத்தில் ஒரு நல்ல மனிதனாக உருவாவதற்கான ஆரம்ப விதையும் விதைக்கப்படும்.

உங்கள் மேலான கருத்துகளைப் பின்னூட்டத்தில் அளிக்கவும். எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள அது உதவிகரமாக இருக்கும் அதே நேரத்தில் பல புதிய நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் நாங்கள் வழங்கவும் ஒரு ஊக்கமாக அது அமையும்.

நன்றி..


கதை சொல்லி # 1...   https://www.youtube.com/watch?v=uiXDviVsgdM&feature=youtu.be

Wednesday, 2 April 2014

நீண்ட நாள் கழித்து என் பள்ளி ஆசிரியையைப் பார்த்தேன்.
அவர் கேட்ட முதல் கேள்வி ," இன்னும் நீதானே காலேஜ் டாப்பர்?"

மைண்ட் வாய்ஸ் : " இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு? "

Saturday, 29 March 2014

அனுபவங்கள் பேசுகின்றன.....

     இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு தனியார் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான விவாத நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முதல் கட்டமாக என் கல்லூரிக்கு வந்து மாணவர்களைத் தேர்வு செய்துகொண்டு போனார்கள். என்னையும் தேர்வு செய்ததில் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த நாள் வரை கால் தரையில் நிற்கவில்லை. றெக்கை இல்லாமல் பறந்துக்கொண்டிருந்தேன். எனக்குக் கிடைத்த தலைப்பு கொஞ்சம் அரசியல் கலந்த சர்சைக்குள்ளானதுதான் என்றாலும் என் அறிவுக்கு எட்டிய வரை என்னால் இயன்ற குறிப்புகளைத் தயாரித்து கொண்டு சென்றேன். 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். கல்லூரியிலிருந்து 12.3௦க்கே கிளம்பி வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோவிற்கு செல்ல மணி 2 ஆகிவிட்டது. அங்கு சென்றால் யாரையும் காணோம்!! “சரி எப்படியும் நாலு மணி ஆகிடும்!! சொன்ன நேரத்திற்கு எப்போ ஆரமிசிருகாங்க நம்ம ஊருலன்னு” நானும் என் தோழியும் ஸ்டுடியோவை சுற்றிப்பார்க்க சென்றுவிட்டோம். மூணும் இல்ல நாலும் இல்ல. நிகழ்ச்சி துவங்கினது ஆறு மணிக்கு! நான் பேச இருந்த பக்கத்தில் ஒரே பெண் என்பதால் இரண்டாவது வரிசையில் அமர வைத்தார்கள்.. எதிர்ப்பார்ப்புகள் எகிறின..!!
பல பிரபலமான பதிப்பகங்களில் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லப்போனால் அந்த வாய்ப்பு மட்டும்தான் கிடைத்தது. கொண்டு சென்ற குறிப்புகள் எதுவும் அங்கு பயன்படவில்லை!! உனக்கு மஞ்ச கலரு பிடிக்குமா இல்ல ஊதா கலரு பிடிக்குமா என்ற ரீதியில் ஏதோவொரு கேள்வியைக் கேட்டார்கள். 6 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் ஒரே ஆறுதல் இடையில் கொடுத்த சூடான டீ மட்டுமே!
எல்லாம் முடிய 11.3௦ ஆகிவிட்டது. மதியம் சாப்பிட்டவர்களுக்குப் பசிக்குமே என்று அக்கறை இல்லை!! பெண்கள் நம் கண்கள் என்று கேமரா முன்னாடி வாய் கிழிய பேசுவோருக்கு இரவு 12 மணி வரை பொம்மைபோல் உட்கார வைத்தோமே..அந்தப் பெண் எவ்வாறு நடுசாமத்தில் வீடு போய் சேர்வாள் என்ற கவலை இல்லை!! எப்படியோ முன்பின் பார்த்திராத என் கல்லூரி MCA சீனியர் அண்ணாவின் உதவியில், வந்திருந்த சிறப்பு விருந்தினரின் காரில் வீடு வந்து சேர்ந்தேன். இந்த லட்சணத்தில் உடல் சோர்வு என்று மறுநாள் கல்லூரிக்கு வேறு செல்லவில்லை! அன்று நான் மனதார வேண்டிக்கொண்டது ஒன்றே ஒன்றுதான்.. “நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் எனக்கு மறந்துவிட வேண்டும்”.

அன்று எடுத்த சபதம்... “போவ?? டிவியில வரணுனு ஆசப்பட்டு இனிமே இந்த மாதிரி எங்கயாவது போவ?? உனக்கு இதுவும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்..!!!”

Friday, 28 March 2014

பிடிவாதங்களைப் பார்க்கும் கண்களுக்குப் போராட்டங்கள் தெரிவதில்லை..
போராட்டங்களை உணரும்போது மனம் பிடிவாதங்களை மதிப்பதில்லை!!